மயிலாடுதுறை: காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யப்பட்ட 12 லட்சம் ஏக்கர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கக் கோரி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், பாதிப்பு நிவாரணங்களை முழுமையாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.
பயிர் காப்பீடு வழங்குமாறு விவசாயிகள் ஆர்பாட்டம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன், "அலுவலர்கள் குளறுபடிகளால், தமிழ்நாடு அரசு தற்போது அளித்த நிவாரணம் 20 சதவீதம் அல்லது 30 சதவீதம் என குறைவாக வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35ஆயிரம் முழுமையாக வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு நிறுவனத்தினர் அறுவடையை ஆய்வு செய்வதை கைவிட்டு மழை அளவை கணக்கில் கொண்டு மாவட்டந்தோறும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என தெரிவித்தார். பின்னர், போராட்டத்தின் இறுதியாக மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனுவை வழங்கினார்.