நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வெளிமான், புள்ளிமான், நரி, முயல் குதிரை உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. தற்போது, கோடை வெயில் வாட்டிவதைப்பதால் தண்ணீர் தேடி வன விலங்குகள் சரணாலயத்தைவிட்டு அவ்வப்போது வெளியில் வருவது வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், சரணாலயத்தை விட்டு வெளியே வந்த ஆண் புள்ளி மானை நாய்கள் கூட்டம் துரத்தியுள்ளது. இதில், பயந்த புள்ளிமான் தப்பிபதற்காக கடலில் குதித்துள்ளது. கரையிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவிற்கு நீந்திச் சென்ற புள்ளிமான் செய்வதறியாமல் திகைத்துள்ளது. அப்போது, கோடிக்கரையிலிருந்து பைபர் படகில் மீன் பிடிப்பதற்காக அவ்வழியே வந்த மீனவர் ஜோசப்பும் அவருடன் வந்த சக மீனவர்களும் கடலில் மான் நீந்திக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.