உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்வேறு மக்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளில், சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
அதில் 55 வயது நிறைவடைந்தவர்கள் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிய தடை விதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் முன்னதாக வேலையிழந்து ஊரடங்கில் தவித்து வந்த தினக்கூலிகள் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டும், தங்களுக்கு வேலையில்லாததால் வருத்தத்தில் உள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக் கூலிகள் இதுகுறித்துப் பேசிய நாகப்பட்டினம் மாவட்டம், புதுச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த தினக் கூலிகள், 'அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தினக்கூலி வழங்கவேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. தற்போது ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளபோது 55 வயது நிறைவடைந்தவர்கள் வேலைக்குச் செல்ல தடைவிதித்திருப்பது தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தாங்கள் ஏற்கெனவே, வீட்டு வாடகை, உணவு, தவணைகள் எனப் பலவற்றால் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம். தற்போது வேலையும் இழந்துள்ளதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தங்களுக்கு மீண்டும் வேலையினை வழங்கவேண்டும் அல்லது உரிய நிவாரணம் வழங்கி, தங்களது வறுமையைப் போக்க வேண்டும்' என மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: பத்தில் ஒருவருக்குத் தான் தற்போது 100 நாள் வேலை கிடைக்கிறது - மாணிக்கம் தாகூர்!