கடந்த 2018 ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, சென்னையில் இருந்து 930 கி.மீ. தொலைவில் உருவான புயல், கஜா. இந்தப் புயல் மெல்ல மெல்ல நகர்ந்து நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவு நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.
ஒரு மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மொத்தமும் இந்தப் புயலால் உருக்குலைந்தன. அந்த நாள் அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாகப் புரட்டிப்போட்டது. பலரின் வீடுகள் தரைமட்டமாகின.
தோப்புகளில் தோரணையாய் நின்றிருந்த மரங்கள் புயலால் சாய்ந்து நிலைகுலைந்து கிடைந்தன. இப்புயல் வந்து இரண்டாண்டுகள் ஆனாலும் கூட, இன்னும் சில குடும்பங்களின் வாழ்க்கையில் பசுமையான நாள்களை வரவிடாமல் செய்துவிட்டது. அதில் ஒன்றுதான் ரவியின் குடும்பம்.
தென்னங்கீற்றால் வேய்ந்த கூரை, தரைத்தளம் முழுக்க மண் பூச்சு, தார்ப்பாய்தான் சுவர் என பாதுகாப்பில்லாமல் அமைந்திருக்கும் குடிசைதான் ரவியின் ஒரே சொத்து. காலை சற்று சாய்த்து நடக்கும் ரவிக்கு ஒரு கையும், காலும் செயல் இழந்தவை.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி, உஷா. ரவிக்கு காலும், கையும் செயலிழந்துவிட்டது, அவருடைய மனைவி உஷாவுக்கு பிறவியிலிருந்தே வாய் பேச முடியாது.
இவர்கள் வாழ்க்கை இப்படியிருக்க, ‘என் மூத்த குழந்தையாலும் நடக்க முடியாதுங்க... மதுஸ்ரீயும் மாற்றுத்திறனாளிதான்’ என மௌனமான குரலில் ரவி கூறுவது கேட்போர் மனதைக் கனக்கச் செய்கிறது.
ரவிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் மதுஸ்ரீ, இளைய மகள் காமாட்சி. இவர்கள் இருவரையும் கவனித்துக் கொள்ள உஷா வீட்டிலேயே இருக்கிறார். முன்பு ரவி கூலி வேலை பார்த்து குடும்பத்தை கவனித்துவந்தார்.
ஆனால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் ரவியின் காலும், கையும் செயல் இழந்ததால் தனது குடும்பத்தின் அன்றாட தேவையைப் பூர்த்தி செய்யவே அல்லல்பட்டுவருகிறார்.
இதனால் கஜா புயலால் சிதிலமடைந்த தனது வீட்டைக்கூட ரவியால் சீரமைக்கமுடியவில்லை. சுவர்களின்றி இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு யூரியா சாக்கு பைகள்தான் அரண், பாதுகாப்பாகப் பூட்டிப்படுக்க கதவுகள் கூட இல்லை.
வயல்வெளியில் அமைந்திருக்கும் இந்த வீட்டில் கழிவறை உள்ளிட்ட சுகாதாரத் தேவைகளுக்கான அடிப்படை வசதிகள் கிடையாது. நவீன யுகமான இக்காலத்தில் ரவியின் வீட்டில் சிறிய குண்டு பல்பு ஒளிரும் அளவிற்குகூட மின்சார வசதி கிடையாது.
மண் அடுப்பு, பிளாஸ்டிக் பை, துருபிடித்த இரும்பு கட்டில், தரையில் வைக்கப்பட்டிருக்கும் சில பாத்திரங்கள், குழந்தைக்கான ஒரு தொட்டில் என சொற்ப பொருள்களை மட்டுமே தன்னகத்தே கொண்டுள்ளது, ரவியின் வீடு.
"கஜா'ல வீடு போச்சு, இப்போ பட்டினில உசுரே போகுது" ஆதரவற்ற குடும்பத்தை காக்குமா அரசு? வெட்டாந்தரையாக இருக்கும் இந்த வீட்டினுள் வசிப்பது குறித்து ரவி, “புதிய வீடு கட்டுமளவுக்கு என்னிடம் வருமானம் இல்லை, வேலைக்குச் செல்லவும் என்னிடம் திராணியில்லை. மாத்திரை மருந்துகளில் கழிகிறது என் காலம்.
என் மகளுக்கும் நடக்க முடியாது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அரசைத்தான் நம்பியிருக்கிறேன்” என்கிறார் தோய்ந்த குரலில். ரவியால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை, அவருடைய மனைவியும் பேச முடியாதவராகிவிட்டார் என பேசத் தொடங்கும் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், “ஊர் சார்பில் ரவிக்கு அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கிவருகிறோம்.
அவர்களுக்கு கொடுப்பதில் எங்களுக்கு சிக்கல் இல்லை. ரவிக்கு ஆதரவாக உடன்பிறப்புகள்கூட கிடையாது. கடந்த 20 வருடத்திற்கு முன்பாக அவனுடைய பெற்றோரும் காலமாகிவிட்டனர். அரசு ரவியின் குடும்பத்திற்கு உதவவேண்டும்” என்றார்.
இது குறித்து அப்பகுதி இளைஞர் இனியன், “அண்டை வீட்டார்கள் ஆதரவு கரம் நீட்டினாலும், ரவி குடும்பத்தாரின் பாதுகாப்பிற்கு ஓர் காங்கிரட் வீடும், வாழ்வாதாரத்திற்கு உதவித்தொகையும் கொடுப்பதே அவர்களைக் காக்கும்” என்றார்.
ரவியின் குடும்பம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அதே மாவட்டத்தில்தான் அமைச்சர் ஓ.எஸ். மணியனும் வசித்துவருகிறார். ’பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பம், சீக்கிரம் வீடு கட்டிக் கொடுங்க சாமி’ என இறைஞ்சுகின்றனர், தலைஞாயிறு பகுதியினர். அரசின் உதவியைப் பெற்றுத்தருவாரா அமைச்சர்? உதவ முன்வருமா மாவட்ட நிர்வாகம்? அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறது, ரவியின் குடும்பம்.
இதையும் படிங்க: 'எனது கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து, உதவி செய்த ஈடிவிக்கு ரொம்ப நன்றி'