நாகை அருகே உள்ள பட்டினச்சேரி மீனவ கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து வருவதால் மீனவர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு நாகப்பட்டினம்: நாகை மாவட்டம்,நரிமணத்தில் சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. காவிரி படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த கப்பல்களுக்கு எண்ணெய்யை கொண்டு செல்ல, நரிமணத்தில் இருந்து சென்னை பெட்ரோலியம் கழகத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் சாமந்தான்பேட்டை வழியாக, புதுச்சேரி மாநிலத்திலுள்ள, பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயை, கப்பலில் வரும் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள சென்னை பெட்ரோலியத்திற்குச் சொந்தமான குழாய் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் நேற்று (மார்ச் 2) இரவு கடலில் கலந்துள்ளது. கச்சா எண்ணெய்யில் இருந்து வெளியேறும் நெடி, வாயு ஆகியவை அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறலை ஏற்படுத்தி வருகிறது.
அதேநேரம் குழாய் உடைப்பில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய், சாமந்தான்பேட்டை மீனவ கிராமம் உள்ளிட்ட பல மீனவ கிராமங்களின் கடல் பகுதி வரை பரவியுள்ளது. இதனால் கடல்நீர் மாசு ஏற்பட்டு மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன.
இதனிடையே இது குறித்து தகவலறிந்த சென்னை பெட்ரோலியக் கழக அதிகாரிகள், ஓ.என்.ஜி சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல், கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக சென்னை பெட்ரோலியம் கழகம் இந்த குழாய் அமைத்தபோது, பட்டினச்சேரி மீனவக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளித்த நிலையில், குழாய் உடைப்பால் பாதிப்பு ஏற்பட்டு வருவதையடுத்து கிராமத்தில் அவரசக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட மீனவ கிராம மக்கள் கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள், உடனடியாக இங்கு உள்ள குழாயினை அகற்றி விட வேண்டும் எனவும், அதுவரை தங்களது வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான சார்லி கப்பல் 435 மற்றும் 436 என்ற இரண்டு கப்பல் மற்றும் டோனியர் விமானம் மூலம் கடலில் எந்த அளவு எண்ணெய் படர்ந்துள்ளது என்பதை கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் அங்கு வந்த சிபிசிஎல் சேப்டி அலுவலரை, கச்சா எண்ணெய் வெளியேறும் கடற்கரையில் மீனவர்கள் தள்ளிவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு குழாயில் ஏற்பட்ட அடைப்பை பழுது நீக்கம் செய்ய வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தி, குழாய் இப்பகுதியில் இருக்கக் கூடாது என்றும், அதை நிரந்தரமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு!