மயிலாடுதுறை: பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளன்று அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டது தொடர்பாக மணல்மேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருதரப்பையும் சேர்ந்த எட்டு பேரை கைதுசெய்தனர்.
இந்த நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி மேட்டூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆனந்த்ராஜ் (33), சங்கர் (28) ஆகியோர் சங்கரின் தாயார் இறந்ததையடுத்து பட்டவர்த்திக்கு வந்துள்ளனர். அப்போது இருவரையும் மணல்மேடு காவல் துறையினர் டிசம்பர் 6ஆம் தேதி மோதல் சம்பவத்தில் தொடர்புடையர்கள் என்று கூறி விசாரணைக்காக மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.
வாகனத்தை முற்றுகையிட்டு மறியல்
சம்பவ நாளன்று இருவரும் மேட்டூரில் வேலைபார்த்ததற்கான ஆதாரங்களை அவரது உறவினர்கள் காட்டியும், காவல் துறையினர் அவர்களை விடுவிக்காமல் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்த அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அம்பேத்கர் நினைவுநாள் மோதல் வழக்கு: சிபிஎம் போராட்டம் இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், துரைராஜ், ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியினர் ஆனந்தராஜ், சங்கர் ஆகியோரை அழைத்துச் செல்ல முயன்ற காவல் துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் விடுவித்தனர். கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் தெரியாததால் 41(A) நோட்டீஸ் வழங்கி விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், ஆவணங்கள் சமர்ப்பித்ததால் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை - லெப். ஜெனரல் நன்றி