தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதாந்தா, ஓ.என்.ஜி.சி உள்ளே நுழையமுடியாது - கே. பாலகிருஷ்ணன்

நாகை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி.  நிறுவனங்கள் டெல்டா மாவட்டங்களுக்குள் நுழையவிடமாட்டோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By

Published : May 7, 2019, 8:10 PM IST

CPM

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் ஜூன் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களை டெல்டா மாவட்டங்களில் அனுமதிக்க மாட்டோம் எனவும், மீறி செயல்படுத்தப்பட்டால் டெல்டா மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழ்நாட்டில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நீர்நிலைகளை பராமரிக்காமல் ஏரி குளங்களைத் தூர் வாராமல் சிவபெருமானுக்கு யாகம் வளர்த்தால் மழை பொழியுமா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details