தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். நாகை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தோல்வியடையும். இதனால், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை முடக்கும் வகையில் இன்றைக்கு வருமானவரித் துறையைப் பயன்படுத்தி சோதனை நடத்தினால், இந்த அணியினுடைய வெற்றியை தடுத்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
பாஜக தலைவர்கள்,அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடுகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கெல்லாம் சோதனை நடத்தாமல் எதிர்க்கட்சிகளின் வீடுகளில் சோதனை நடத்துவது திட்டமிட்ட சதி.
மீத்தேன் திட்டம்தான் ஆபத்தானது; ஹைட்ரோகார்பன் ஆபத்தான திட்டம் அல்ல என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிவருகிறார். அவருக்கு எந்த வாத்தியார் பாடம் நடத்தினார் என்று தெரியவில்லை. இந்தத் திட்டத்தால், விவசாயம் நிலம் நாசமடைவதுடன், மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும். இந்தத் திட்டங்கள் குறித்த ஆதாரங்களை அமைச்சர் கேட்டால் நாங்கள் தருகிறோம். இவ்வாறுஅவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை கம்யூனிஸ்ட் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், இந்தத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் செயல்படுகின்றோம். ஆனால் கேரளாவில் பாஜக கிடையாது. எனவே கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. யார் வெற்றி பெற்றாலும் மத்தியில் மதச்சார்பற்ற அணி அமைப்பதற்கு அந்த வெற்றி பயன்படும் என பதிலளித்தார்.
மா.க.செயலாளர் பாலகிருஷண்ன் பேட்டி