மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகேவுள்ள செங்கமேட்டுத் தோப்பில் ஒரு ஆணும், பெண்ணும் தனித்தனியே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து திருச்சம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரிக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவர்கள் தூக்கிட்ட இடத்தில் இருசக்கர வாகனம், செல்போன், கைப்பை ஆகியவை கிடந்துள்ளன. அந்தப் பையில் ஒரு கடிதம் சிக்கியது.
அதில், “நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எங்களது உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை, அதனால் எங்களை யாரும் மதிப்பதில்லை, எங்களைப் பார்க்க யாரும் வருவதில்லை. இதனால், நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை, ஈரோட்டில் சீட்டுப் போட்டுவைத்துள்ளோம்.
வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் வீட்டில் வைத்திருக்கிறோம், அதை எடுத்துக் கொள்ளவும். எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை, எங்களது உறவை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் மன விரக்தியில் இந்த முடிவு எடுத்துள்ளோம்” என எழுதப்பட்டிருந்தது.