நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரிசோதனைக் கருவி மயிலாடுதுறையில் இல்லாததால் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு திருவாரூர் மருத்துக் வகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து சோதனை முடிவு தாமதமாக வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலேயே கரோனா பரிசோதனை செய்வதற்காக 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவி (RT- PCR testing machine) வரவழைக்கப்பட்டது.
பரிசோதனை செய்ய இரண்டு வல்லுநர்கள் மற்றும் நான்கு டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டு இன்று (செப்டம்பர் 9) முதல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலேயே ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனையை மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், அரசு மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கருவி மூலம் நாளொன்றுக்கு 250 பேருக்கு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.