தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டமான நாகையில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்துவருகிறது. காவிரியில் கடந்த பல ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாததால், பம்புசெட்டு வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் பம்புசெட்டு வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் முன் பட்ட குறுவை சாகுபடிக்கு விதை விட்டு, நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட தாலுகாக்களில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.
உலகமே கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கால் முடங்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய விவசாய பணிகளை தடை செய்தால் பட்டினி சாவுகள் ஏற்படும் என்பதால், விவசாய பணிகளுக்கு தடையில்லை என்று அரசு அறிவித்ததால் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர்.