தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா ஊரடங்கால் பயனற்றுபோன விளையாட்டுப் பயிற்சிகள்! - விளையாட்டுப் பயிற்சிகள்

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விளையாட்டு வீரர்களால் ஆரோக்கியமாகவும், முழு உடல் தகுதியுடனும் செயல்பட முடியும். அவ்வாறு இருக்க கடந்த 7 மாத காலங்களாகப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும், பல ஆண்டுகளாக மேற்கொண்ட பயிற்சிகள் அனைத்தும் வீண் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுகுறித்த செய்தித்தொகுப்பு...

corona-curfew-useless-sports-exercises-dot
corona-curfew-useless-sports-exercises-dot

By

Published : Oct 20, 2020, 11:09 PM IST

Updated : Oct 22, 2020, 5:06 PM IST

கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரஸின் தாக்கத்தால் இன்று அனைத்து துறைகளும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இதிலிருந்து ஒவ்வொரு துறையும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், விளையாட்டுத்துறை மீள சற்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

நாகை விளையாட்டு மைதானம்

மற்ற துறைகளில் ஒருவருக்கொருவர் இடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியம். ஆனால், கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, கபடி போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது சவாலானது. கிரிக்கெட்டில் பந்தைப் பளபளப்பாக்க எச்சிலைத் தொட்டுத் துடைக்க தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா கட்டுப்பாட்டால் நாடு முழுவதும் விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு மையங்கள் மூடப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வந்தது.

கூடைப்பந்து பயிற்சி அரங்கம்

சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே விளையாட்டு வீரர்களால் ஆரோக்கியமாகவும், முழு உடல் தகுதியுடனும் செயல்பட முடியும். அவ்வாறு இருக்க கடந்த எட்டு மாத காலங்களாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல், ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும், இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்டப் பயிற்சிகள் அனைத்தும் வீண் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று ஊரடங்கில் கல்வி உள்ளிட்ட அனைத்தும் காணொலி வாயிலாக (விர்ச்சுவல்) வகுப்புகளாக, கூட்டங்களாக நடத்தப்பட்டது. ஆனால், மனதிற்கும், உடலுக்கும் ஒரு சேர பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளுக்கு எவ்வித பயிற்சியும் எடுக்க முடியாமல் வீரர்கள் முடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விளையாட்டு மையங்கள், விளையாட்டு அரங்குகள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மீண்டும் உற்சாகத்துடன் பலரும் தங்கள் பயிற்சியினை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கூடைப்பந்து பயிற்சியில் வீரர்கள்

இதுகுறித்து இரண்டு முறை உலக சாதனை படைத்த நீச்சல் வீரரான சபரிநாதன் கூறுகையில், "கரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த எட்டு மாதங்கள், என்னால் பயிற்சியினை மேற்கொள்ள முடியவில்லை. திருவள்ளூரிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்ச்சியாக கடலில் நீந்தி சாதனை புரிவதற்காக, கடந்த 8 ஆண்டுகளாக பயிற்சி மேற்கொண்டு வந்தேன். ஆனால் இந்த கரோனா ஊரடங்கு காரணமாக நான் மேற்கொண்ட பயிற்சிகள் அனைத்தும் வீணாகி, தற்போது மீண்டும் முதலில் இருந்து பயிற்சியைத் தொடங்கும் சூழலிற்குத் தள்ளப்பட்டுள்ளேன்” என்று வேதனை தெரிவித்தார்.

உடற்பயிற்சியில் ஈடுபடும் வீரர்கள்

விளையாட்டு மையங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியது குறித்து நாகை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா கூறுகையில், "கரோனா கட்டுப்பாடுத் தளர்வுகளுக்கு பின் பொதுமக்களிடம் கருத்து கேட்டு அவர்களின் உடல்நலம் கருதியும், விளையாட்டு வீரர்களின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு மாநில, மாவட்ட அளவிலான போட்டிகள், விளையாட்டு பயிற்சி, உடல்பயிற்சி, நடைப்பயிற்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

விளையாட்டு பயிற்சியில் பள்ளி மாணவி

இதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, தடகளம், இறகுபந்து, பூப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மீண்டும் முன்பு மேற்கொண்ட அதே உற்சாகத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதால் அதிக அளவிலான மாணவர்கள் தற்போது பயிற்சி பெற வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் பயிற்சி மேற்கொள்ள, மீண்டும் திறக்கப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கால் பயனற்றுபோன விளையாட்டுப் பயிற்சிகள்

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நன்மை தரக்கூடிய விஷயம் விளையாட்டு. அந்த விளையாட்டுகளை பயிற்சி செய்வதற்கே தற்போது பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. உடல் வலிமை தரும் விளையாட்டுக்களை உயிரைப் பறிக்கும் கரோனாவிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு பயிற்சிகளை மேற்கொள்ள அரசு உதவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:இயற்கை விவசாயத்தில் களமிறங்கி அசத்தும் முதுநிலைப் பட்டதாரி பெண்

Last Updated : Oct 22, 2020, 5:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details