மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் சீர்காழி நகரக் கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி நகரக் கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி சான்று வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 65 கூட்டுறவு நிறுவனங்களில் 1,217 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் சீர்காழியில் ரூபாய் 13.7 கோடிக்கான கடன் தள்ளுபடி சான்றினை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காகத் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள செங்கரும்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது விவசாயிகள் கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்குக் கரும்புகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்ட அவர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். ஆய்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.