மயிலாடுதுறை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் மயிலாடுதுறையில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "ஊழலை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 36,000 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சி சார்பில் செலவு செய்யப்பட்டு நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 36 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? இது ஊழல் செய்த பணம்.
இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரசால் மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான். அதை வலுப்படுத்துவதற்காக ராகுல் காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டு நாட்டை ஒருங்கிணைத்தவர் ஜவஹர்லால் நேரு அதையெல்லாம் மறைத்து மோடி நாடகமாடுகிறார்" என்றார்.