மயிலாடுதுறை: நகராட்சியில் 35 வார்டுகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 24 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக தலா 1 இடத்திலும், அதிமுக 7 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதில் வெற்றி பெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் நேற்று (மார்ச் 2) பொறுப்பேற்றனர். இதையடுத்து, நகர்மன்றத் தலைவர் பதவிக்கு திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளர் குண்டாமணி செல்வராஜை நியமித்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
நகர்மன்றத் தலைவர் பதவி
இந்நிலையில், 2006-2011 ஆம் ஆண்டில் நகர்மன்றத் தலைவராக இருந்த லிங்கராஜன் என்பவரும் தற்போது நகர்மன்றத் தலைவராக முனைப்புக் காட்டி வருகிறார். நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு முடிந்தவுடன், திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தனது ஆதரவு உறுப்பினர்கள் 18 பேரை சொகுசு வேனில் ஏற்றிச் சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், அவருக்கே தலைவர் பதவிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.