தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Actor Senthil: தருமபுரம் ஆதீனத்தை சந்தித்த நடிகர் செந்தில் - கவுண்டமணி செந்தில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்து நகைச்சுவை நடிகர் செந்தில் ஆசி பெற்றார்.

actor_senthil_dharmapuram
actor_senthil_dharmapuram

By

Published : Jun 17, 2023, 3:54 PM IST

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார். கிருத்திகை நாளான இன்று (17.06.2023) தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ய நடிகர் செந்தில் சென்றிருந்தார். அப்போது ஆதீன கர்த்தரை சந்தித்து நடிகர் செந்தில் ஆசி பெற்றார்.

தமிழ் சினிமாவிலிருந்து கிட்டத்தட்ட ஒதுங்கிவிட்ட நிலையில், ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார் நடிகர் செந்தில். ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்களை ஆதரித்துப் பல இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார், செந்தில். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தொடங்கிய அமுமுகவில் இணைந்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் 2020ஆம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமீபத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் தருமபுரம் உள்ளிட்ட ஆதீன கர்த்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து நடிகர் செந்தில் ஆசிபெற்றுள்ளார்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட செந்தில் சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகர் செந்தில், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களுடன் வந்திருந்தார். அவருடைய ஆயுள் விருத்திக்காக பீமரத சாந்தி ஹோமம் செய்து வழிபாடு நடத்தினார்.

ராமநாதபுரம் கலை உலகத்திற்குக் கொடுத்த மிகச்சிறந்த முத்துக்களில் ஒன்று செந்தில். சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983-ம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையில் அசத்தி மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது கவுண்டமணி-செந்தில் கூட்டணி.

இவர்களுடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவி பட்டையைக் கிளப்பியுள்ளது. ஏறத்தாழ இருவரும் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அந்த படம் ஹிட் என்ற அளவிற்குக் கொடி கட்டிப் பறந்தனர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் கவுண்டமணியையும், செந்திலையும் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இவர்களது ஜோடியானது மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

இதையும் படிங்க :மாணவ மாணவிகளைச் சந்திக்கும்விஜய்

ABOUT THE AUTHOR

...view details