மயிலாடுதுறைகர்நாடக மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டுள்ளது.
இன்று(அக்.17) மாலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.