நாகை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இட வசதி இல்லாததால், சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிப்பதற்காக இட வசதிகள் உள்ளனவா என்று நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆட்சியர் பிரவீன் நாயர், நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 300க்கும் மேற்பட்டோராக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி பகுதியில் இரண்டாம் நிலை சிகிச்சை மையங்களை உருவாக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குறைவான நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒவ்வொரு இரண்டாம் நிலை சிகிச்சை மையங்களில் குறைவான அறிகுறி உள்ளவர்கள் 46 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
கரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்து சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு மேலும் சீர்காழியிலுள்ள தலைமை அரசு மருத்துவமனையில், இரண்டாம் நிலை சிகிச்சை மையத்தை உருவாக்குவதற்கு தற்பொழுது ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், மயிலாடுதுறையில் உள்ள சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 7&8) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்படுவதாகவும், ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பல்வேறு அதிகாரிகளுக்கு பரிசோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.