நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருவதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்துச் செயல்பட வேண்டும் எனவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று (ஏப். 14) நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, நாகூர் புதிய பேருந்து நிலையம், கடைவீதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் உள்ள ஊழியர்கள், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பதை ஆய்வுசெய்தனர்.
இதைத் தொடர்ந்து, முகக்கவசம் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து வசூலித்தனர்.