தமிழ்நாடு அரசின் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
நாளை மயிலாடுதுறை மாவட்டத்தின் தொடக்க விழா கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை வருவாய்கோட்டத்தில் இருந்த 4 வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய மயிலாடுதுறை புதிய மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
தொடர்ந்து, ஏப்ரல் 7ஆம் தேதி அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலராக இரா.லலிதா, மாவட்ட காவல்கண்காணிப்பாளராக ஸ்ரீநாதாவும் ஆகியோர் நியமிக்கப்பட்டு, எல்லை வரையரைபணிகள் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் மூலமாக தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்தது. எல்லை வரையரைப் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மயூரநாதர்கோயில் தெற்குவீதியில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் தற்காலிக மாவட்ட ஆட்சியரகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட நிரந்தர மாவட்ட நிர்வாகக் கட்டடங்களை கட்டுவதற்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக மாவட்ட செயலாளர் விஜிகே.செந்தில்நாதன், எம்எல்ஏக்கள் வீ.ராதாகிருஷ்ணன், எஸ்.பவுன்ராஜ், பி.வி.பாரதி உள்ளிட்டோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று மன்னம்பந்தலை அடுத்த பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக உதயமாகும் மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி நாளை (திங்கள்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடக்கிவைக்கிறார். இதற்கான தொடக்க விழா மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மக்களின் கால் நூற்றாண்டு கனவான புதிய மாவட்டம் உதயமாவது மாவட்ட மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:'அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான்' - விந்தியா பேட்டி