மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட கோமல் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் எழிலரசி. இவரது கணவர் பாலசுப்பிரமணியன் திமுக பிரமுகர் எனக் கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நாட்டாண்மையாக இருந்த பாலசுப்பிரமணியன், கோமல் கிராமத்தில் திருமண மண்டபம் கட்டுவதாகக் கூறி அப்பகுதியில் உள்ள குளத்தில் மண் எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த பணத்தில் தொடங்கப்பட்ட திருமண மண்டபம் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டது. திருமண மண்டப கட்டுமான பணிக்கு செய்யப்பட்ட செலவை விட கூடுதலாக ரூ.40 லட்சம் வசூலிக்கப்பட்டதாகவும் அதற்கு கிராம மக்கள் கணக்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் பாலசுப்பிரமணியன் கணக்கு காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அவரை கிராம நாட்டாண்மை பொறுப்பில் இருந்து கிராம மக்கள் நீக்கி உள்ளனர்.
இதனால் இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து உள்ளது. இந்நிலையில், பாலசுப்பிரமணியன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்காக ஏற்கனவே திருமண மண்டபம் கட்ட வாங்கிய மணலை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கோமல் வடக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 60), குணசேகர் (வயது 43) ஆகியோர் தட்டிக் கேட்டதாகவும் இதுகுறித்து பாலையூர் காவல் நிலையத்துக்கு புகார் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.