நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்தப் பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக அனைத்து மதத்தினரும் நம்பிக்கையுடன் வந்து வழிபட்டுச் செல்லும் ஆன்மிக தலமாகத் திகழ்கிறது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பு திருப்பலி
ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரசு அறிவுரையின்படி, தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்கும் நோக்கில் அருகிலுள்ள சேவியர் திடல் மாநாட்டுப் பந்தலில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி விழா தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடைபெற்றது.
இயேசு பிறப்பு நிகழ்ச்சி
அதனைத் தொடர்ந்து, நள்ளிரவு இயேசு பிறப்பு நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது. அப்போது, பேராலய அதிபர் பிரபாகர், பங்குத் தந்தை அற்புதராஜ் ஆகியோர், குழந்தை இயேசு சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடில் வைத்து, அனைவருக்கும் அறிவித்தனர். இதில், தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிப்பாடு செய்தனர்.
இதையும் படிங்க:பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி