நாகை: காரைக்காலில் கடந்த சில நாட்களாக காலரா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் துறைச்செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாநில பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், காரைக்கால் பகுதியைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு எல்லையோர கிராமங்களில் நோய் பரவல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கும் தண்ணீரில் போதிய குளோரின் கலக்கப்படுகிறதா, சுகாதாரமான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் செல்வவிநாயகம், “காரைக்காலில் காலரா பரவி வருவதால் அப்பகுதியை சுற்றியுள்ள நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய தமிழ்நாட்டு எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் மற்றும் துணைச்செயலாளர் அறிவுரைப்படி ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
எல்லையோரம் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நீரேற்று நிலையங்களிலும் ஆய்வு செய்துள்ளேன். மேலும் மருந்து இருப்பு குறித்தும், வார்டு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தேன். இதுகுறித்த முழு அறிக்கை அமைச்சரிடம் சமர்பிக்கப்படும். மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.