மயிலாடுதுறையில் காவலர்களின் குழந்தைகள் உலக சாதனை மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவலர்களாக பணிபுரியும் மகாதானபுரத்தைச் சேர்ந்த ஹரிபாஸ்கர் - கார்குழலி தம்பதிக்கு 8ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வின் (12) என்ற மகனும், 4ஆம் வகுப்பு படிக்கும் அஸ்விதா (8) என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் 2024 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று, அஸ்வின் சிலம்பத்திலும், அஸ்விதா ஜிம்னாஸ்டிக் வளையம் சுற்றியும் உலக சாதனை படைக்கும் முயற்சியாக, ஒருமாதம் பயிற்சி எடுத்து, இன்று (டிச.31) உலக சாதனை படைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு (Jackhi Book of World Records) நடத்திய நிகழ்வில், மாணவன் அஸ்வின் சிலம்பத்தில் உள்ள அனைத்து முத்திரைகளையும் 2024 முறை சிலம்பம் சுற்றிக்கொண்டே, சிலம்பத்தின் வரலாறுகளைக் கூறி, சிலம்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து உலக சாதனை படைத்தார்.
இதேபோல் மாணவி அஸ்விதா, ஜிம்னாஸ்டிக் வளையத்தை வயிறு, கால், கழுத்து போன்ற உடல் பகுதிகளில் 2024 முறை சுற்றி உலக சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து, ஜாக்கி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு அண்ணன், தங்கை இருவரும் 33 நிமிடம் 24 விநாடிகளில் நிகழ்த்திய சாதனையை, உலக சாதனையாகப் பதிவு செய்தது.
முன்னதாக, சிறுவர்கள் சாதனை படைக்கும் நிகழ்வின்போது, பணி நிமித்தமாக வெளியூர் சென்ற தந்தை வரமுடியாத காரணத்தால், குழந்தைகளின் உலக சாதனை நிகழ்ச்சியை தாய் கார்குழலி வீடியோ காலில் காண்பித்தவாறு கண்ணீர் மல்க குழந்தைகளை உற்சாகப்படுத்திய சம்பவம், பார்வையாளர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, சாதனை படைத்த இருவரையும் தாய் கண்ணீருடன் ஓடி வந்து கட்டியணைத்து முத்தமிட்டார். இதையடுத்து, சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் விருதினை, நிறுவனர் ஜாக்கப் ஞானசெல்வன் மற்றும் தமிழ்சங்க நிறுவனர் பவுல்ராஜ், அழகுஜோதி அகாடமி தாளாளர் சிவக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.
இதையும் படிங்க:2024 புத்தாண்டு கொண்டாட்டம்:புதுச்சேரியில் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!