நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சங்கு என்கிற சீனிவாசன் (44). இவர் வல்லம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.
போக்சோவில் கைது செய்யப்பட்ட சீனிவாசன் இந்நிலையில், அந்தச் சிறுமி அழுதுக்கொண்டே வீட்டிற்கு சென்று நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அச்சிறுமியின் உறவினர்கள் சீனிவாசனை பிடித்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்தப் புகார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் அச்சிறுமியிடம் விசாரணை நடத்தி, சங்கு என்கிற சீனிவாசனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து காவலில் அடைத்தனர்.
இதைக் கேள்விப்பட்ட சீனிவாசனின் அண்ணன் நாகலிங்கம்(45) பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செம்பனார்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நாகலிங்கத்தை கைது செய்தனர். அண்ணன், தம்பி இருவருக்கும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.