நாகை அவுரித்திடலில் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தாழை ம.சரவணனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர்,
மத்தியில் 15 ஆண்டு காலம் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்தது. அவர்களால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை. 23 நாட்கள் மாநில உரிமைக்காக, விவசாயிகளுக்காக குரல் கொடுத்ததால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதற்கு ஜெயலலிதா கடுமையாக பாடுபட்டு தமிழக மக்களுக்காக பெற்று தந்தார். திமுகவினர் நாடாளுமன்றம் சென்றால் தனது குடும்ப பதவி சுகம் மட்டுமே குறிக்கோளாக இருப்பார்கள்.
தமிழகத்தில் இதுவரை 37 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. 57 லட்சம் மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்தை தாங்கள் செயல்படுத்துவதாக கூறியுள்ள எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினால்,எப்படி நிறைவேற்ற முடியும். பொய்யான தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது திமுக.
ஸ்டாலின் தலைவர் பதவிக்கு தக்கவாறு நடந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின் அப்படி நடக்கவில்லை. அதிமுக அரசு ராஜினாமா செய்ய எவ்வளவு நெருக்கடியை சந்திக்க முடியுமோ அவ்வளவு செய்துள்ளார். ஒரு ஆண்டில் 35 ஆயிரம் போராட்டங்களை சந்தித்துள்ளேன்.
நான் கீழ் மட்டத்தில் இருந்து தான் முதலமைச்சராக வளர்ந்துள்ளேன். அதனால் கீழ் மட்ட தொண்டன் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம். எனது ஆட்சியை கவிழ்க்க நினைத்து கவனம் செலுத்திய ஸ்டாலின், தனது கட்சியில் கவனம் செலுத்தவில்லை. ரூ.34 கோடி மதிப்பில் நாகை நம்பியார் நகர் புதிய துறைமுகம்,ரூ.10.50 கோடி பனங்குடி ஏரி தூர் வாரப்படும். இது மக்களின் ஆட்சி இந்தஆட்சி தொடர மக்கள் வாக்களியுங்கள், என்று அவர் கேட்டுக் கொண்டார்.