நாகப்பட்டினம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 110 கிராமங்களில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவேண்டிய நிலை உள்ளது.
இதனால், 18 கிலோமீட்டர் தூரம் கடந்து மணல்மேடு பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ விபத்து ஏற்பட்ட வீடுகள் முற்றிலும் எரிந்துவிடுகின்றன. இந்நிலையில், மணல்மேட்டில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துவந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மணல்மேட்டில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டார். அதன்படி மணல்மேட்டில் தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.