கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதன் காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு நெறிப்படுத்தியுள்ளது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது தண்ணீரை மாசு படுத்தாமல் இருக்க, சுற்றுச்சூழல் வழிகாட்டுதலின்படி காகிதக் கூழ் மற்றும் கிழங்கு மாவினால் தயாரிக்கப்பட்டுள்ள பெரிய விநாயகர் சிலைகளை இந்த ஆண்டு விற்பனை செய்ய முடியவில்லை என்று மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.