மயிலாடுதுறைஅருகேமையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றமும், சூறாவளிக் காற்றும் வீசி வருகிறது. அந்த வகையில் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் மீனவர்கள் கடலுக்குச்செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளையும் உடைமைகளையும் கரையிலேயே வைத்துள்ளனர்.
சந்திரபாடி மீனவ கிராமத்தில், 15 அடி உயரத்துக்கு ராட்சச அலை எழுந்ததால் கிராமத்தினுள் கடல்நீர் உட்புகுந்துள்ளது மேலும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சந்திரபாடி மீனவ கிராமத்தில் 900 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தாழ்வான பகுதியான சந்திரபாடி மீனவ கிராமத்தில், புயல் ஏற்படும் காலங்களில் கடல் அரிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அது இந்த முறையும் அரங்கேறி உள்ளது.
இங்கு நேற்று (டிச.8) முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கடல் அலைகள் 15 அடி உயரத்தில் எழுந்து வரை ராட்சத அலையாக மாறியுள்ளது. இதன் காரணமாக கிராம எல்லையான பத்திரகாளியம்மன் கோயிலையும் தாண்டி கடல்நீர் உட்புகுந்து, கிட்டத்தட்ட சந்திரபாடி கிராமம் முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இனி கடல் சீற்றம் முற்றிலுமாக குறைந்தால் மட்டுமே கடல்நீர் மீண்டும் வடிய வாய்ப்புள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “வருடந்தோறும் இதேபோல் புயல், மழை காலங்களில் கடல்நீர் உட்பகுந்து பாதிக்கப்படுகிறது.
சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தரங்கம்பாடியில் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதால், எங்கள் பகுதியில் கடல் சீற்றத்தின்போது கடல்நீர் உள்ளே புகுவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக கடல் அரிப்பைத் தடுக்க கருங்கற்களை கொண்டு தடுப்புச் சுவர் அமைத்து, கடல் நீர் உப்புகாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எங்களின் 10 ஆண்டு கால கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க:மாண்டஸ் புயல் எப்போது கரையை கடக்கும்.? பாலச்சந்திரன் விளக்கம்