மயிலாடுதுறை: குறுவை சாகுபடி நடந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதத்தை 17 சதத்திலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய குழுவினர் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய அரசின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல்லின் மாதிரிகளை சேகரித்தனர். பாண்டூர் விவசாயி பழனி என்பவர் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லில் 19 விழுக்காடு ஈரப்பதம் இருந்தது சோதனையில் தெரியவந்தது.