மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பங்கேற்கவுள்ளார். இதற்கான முன்னேற்பாடாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு நவீன மீனவ தொழில்நுட்பச் சங்க கவுரவ தலைவருமான பாலாஜி சிவராஜ், தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மீனவ பஞ்சாயத்தாரிடம் கலந்தாய்வு நடத்தி அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, மீனவ பஞ்சாயத்தார்கள் நிவர் புயல் தாக்குதலின்போது தரங்கம்பாடி கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தது குறித்தும் அதனை மீண்டும் புதுப்பித்துத் தர வலியுறுத்தியும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலாஜி சிவராஜ், "கடந்த மாதம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் மீனவர்களுக்கு படகுகள், வலைகள் வாங்குவதற்கான மானியத் தொகையை வழங்கி பேசும்போது, மீனவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகள் குறித்து கூறினால் அவற்றை மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தருவதாக உறுதியளித்து இருந்தார்.
அவர், மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரவுள்ளார். அப்போது, மீனவ சமுதாய பெண்கள் மேம்பாட்டுக்கான திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். பூம்புகார், ராமநாதபுரம் பகுதிகளில் நவீன முறையில் கட்டித் தரப்பட்டுள்ள தடுப்பு அணைகளைப் போல் தரங்கம்பாடியில் அமைத்துத் தர மீனவவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிவேக விசைப்படகுகளை பயன்படுத்தும் மீனவர்களால், சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.