நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே முடிகண்ட நல்லூர் கிராமத்தில் குறுவை சாகுபடி பயிர்களை நாசப்படுத்தி வேல் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் காவிரி தனபாலன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கெயில் குழாய் பதிக்க அனுமதி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவைகள் கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோகார்பன் எடுக்கும் வேதாந்தா நிறுவனம் போன்ற எந்த நிறுவனத்திற்கும் அனுமதி அளிக்கமாட்டோம் தடுப்போம் என்று கூறிதான் தேர்தலில் ஓட்டு வாங்கி இருக்கிறார்கள்.
ஏதோ ஒரு கட்சி வெற்றி அடையும்போது இந்த பகுதியில் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என்பதால் தந்திரமாக சட்டத்திற்கு புறம்பாக குழாய் பதிக்கும் பணியை கெயில் நிறுவனம் செய்கிறது. விவசாயிகளின் வயலில் உள்ளே இறங்க வேண்டுமென்றால் விவசாயிகளிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். அப்படி கடிதம் பெறாமல் சர்வாதிகாரமாக இறங்குவது மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டிற்கு உணவு அளிக்கக் கூடிய டெல்டா மாவட்டங்களில் முப்போகம் சாகுபடி செய்யும் நிலத்தை கெயில் நிறுவனம் அழிக்கிறது. அதற்கு காவல்துறை துணைபோகிறது. காவல்துறை அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து பணியை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் விதிமுறை முடிந்தவுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.