மயிலாடுதுறை:கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கண்டித்தும் அதற்கு துணை போகும் திமுக அரசை கண்டித்தும் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திமுக அரசை வன்மையாக கண்டித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதியில், தமிழகத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய காவிரி தண்ணீரை வழங்காமல் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்தும், அதன் கூட்டணி கட்சியான திமுக அரசை கண்டித்தும், கொள்ளிடம் ஆற்றில் உப்பு நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை கட்டக்கோரியும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பொறுப்பாளர் தங்க வரதராஜன், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று கண்டன உரை ஆற்றினார். இதில் பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எச்.ராஜா பேசியதாவது, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் சிவக்குமார் இல்லத்திற்கு சென்று விருந்து சாப்பிட்டார். ஆனால் விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என அவர் கேட்கவில்லை. கர்நாடகாவில் பேசி தண்ணீர் கேட்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுக்கிறார். 5 ஆண்டுகள் பாஜக ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த போது கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.