மயிலாடுதுறை:குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன.
தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்தின என்பது குறிபிடதக்கது. இந்நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருநாள் முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டம் நடத்துவது குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கடையடைப்பு செய்து, தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.