மயிலாடுதுறை:காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் போராட்டம் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. இதில் வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி கடையடைப்பு செய்து தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திமுக மாவட்டச் செயலாளாரும், பூம்புகார் எம்.எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் பேசும்போது எடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் முகநூல் பக்க நேரடி ஒளிபரப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.