மயிலாடுதுறை: செருதியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் அபிராமி (25). இவர் மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை, கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். பின்னர் கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி உள்பட குடும்பத்தினர் சிலர் அபிராமியை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வினோத்குமாரை பிரிந்த அபிராமி, சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளிக்காக கடந்த வாரம் மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் குஞ்சிதபாதம் நகரில் உள்ள தனது தந்தையின் நண்பர் மணிவண்ணன் வீட்டுக்கு அபிராமி வந்துள்ளார். இதனை அறிந்த வினோத்குமார் அபிராமியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
இதற்கு அபிராமி மறுப்பு தெரிவிக்க, கணவன் மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கணவர் வினாத்குமார், அவரது தாயார் புஷ்பவல்லி, புஷ்பவல்லியின் நட்பில் உள்ள நாகை பிசிஆரில் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) இருக்கும் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக் மற்றும் மகள் திவ்யா ஆகிய 5 பேரும் அபிராமி தங்கி இருந்த வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.