தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு! - tharangampadi fishermen

மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு!
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப்பதிவு!

By

Published : Feb 24, 2023, 12:01 PM IST

மயிலாடுதுறை:தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண் குமார், மாதவன், கார்த்தி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மீனவர்கள், நேற்று (பிப்.23) அதிகாலை காரைக்கால் தென்கிழக்கில் 44 நாட்டிகல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இரும்பு ரோப்பால் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இதனையடுத்து கரை திரும்பிய 6 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் கூறுகையில், இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 12 பேர் அடங்கிய இலங்கை கடற்படை குழுவினர் வந்து கொடூர தாக்குதல் நடத்தி, படகு என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வலைகள் மற்றும் இரண்டு பேட்டரி ஆகியவற்றை பறித்துச் சென்றதாக தெரிவித்தனர்.

இதனிடையே மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்ய கடலோர காவல் படை குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழிப்பறி மற்றும் தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் அத்துமீறி நுழைதல் (451), கூட்டுக் கொள்ளை (395), கொடும் காயங்கள் ஏற்படுத்துதல் (397) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதல் - 5 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details