தேரழுந்தூர் வந்த ஆளுநருக்கு எதிராக போராட்டம் மயிலாடுதுறை: கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில், கம்பரின் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில், தஞ்சாவூர் கோட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் "அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்" என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தினர் கருப்புக் கொடி காண்பித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் ஆளுநர் கார் வரும் நேரத்தில் கருப்புக் கொடி காண்பிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் வந்த போராட்டக்காரர்களை, ஆளுநர் செல்லும் பாதையில் இருந்து 100 மீட்டர் முன்பாக மூன்றடுக்கு பேரிகார்டு வைத்து தடுத்து, 520க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சேத்திரபாலபுரம் பகுதியில் சரியாக 12 மணி அளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி காரில் சென்ற நிலையில், போராட்டக்காரர்கள் 100 மீட்டருக்கு அப்பாலில் இருந்து கருப்புக்கொடி காண்பித்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி கோஷமிட்டபோது, போலீசார் அவர்களை குண்டுகட்டாக வேனில் ஏற்றினர்.
அப்போது போலீசாரிடம் இருந்து மறைமுகமாகச் சென்று, பேரிகாடுகளின் இடுக்கில் புகுந்து ஆளுநர் காரை நோக்கி ஓடிய ஒன்றியச் செயலாளர் விஜயகாந்தை, போலீசார் மடக்கிப் பிடித்து கீழே தள்ளி மேலே அமர்ந்து கைது செய்தனர். மேலும், இருவர் வேனில் ஏறாமல் சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர்.
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மக்கள் விரோதப்போக்கு நடவடிக்கையை கண்டித்தும், கருப்புக் கொடி காண்பித்தும், ஆளுநரை திரும்பிப் போகs சொல்லி வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்து, வேனில் ஏற்றி மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். ஆளுநர் வருகையைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித் தகுதியைப் பரிசீலனை செய்யத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!