மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடியைச் சேர்ந்தவர் வினோத் (40). இவர் வீடியோ கடை நடத்திவந்தார். இவருக்கு சாரதா என்ற மனைவியும், சாலமன், சாம்சன் என இரு மகன்களும், ஷாலினி என்ற மகளும் உள்ளனர்.
இவரது இரண்டாவது மகன் சாம்சன், நேற்று (மார்ச் 14) நாகங்குடி கிராமத்திலுள்ள தண்ணீர்பாய்ந்தான் குளத்திற்கு, தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளார்.
அப்போது, பொழுதுசாய்ந்ததால், அப்பகுதியினர் சிறுவர்களை வீட்டிற்குச் செல்லும்படி விரட்டியுள்ளனர். சாம்சனின் சக நண்பர்கள் ஓடிவிட, சாம்சன் மட்டும் குளக்கரையில் பதுங்கியிருந்துள்ளான். சிறிதுநேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்ட சாம்சன் குளத்தில் தவறி விழுந்துள்ளான்.
இந்நிலையில் இரவு 7 மணியைக் கடந்தும் மகனைக் காணாததால், விநோத் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். அப்போது சாம்சன் குளத்திற்குச் சென்றது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த விநோத், குளத்திற்குச் சென்று தேடியுள்ளனர்.
ஆனால் சிறுவன் கிடைக்காததால் சந்தேகத்தின்பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான வீரர்கள், குளத்தில் இறங்கி சாம்சனை தேடியுள்ளனர். ஒருமணி நேரத்துக்குப் பின் சிறுவன் சாம்சன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை காவல் துறையினர் கைப்பற்றி, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் சிறுவன் உயிரிழந்த துக்கம் தாங்காத அவரது தந்தை வினோத், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, வினோத்தின் உடலையும் காவல் துறையினர் கைப்பற்றி, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
பின் இது குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒரே வீட்டில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம்