மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுடைநம்பி (58). இவர் அதே பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இன்று (ஜூலை.16) காலை தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்திற்கான கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகளை பார்வையிட அறிவுடைநம்பி சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர்.
தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டபடி எரிந்த நிலையில் அறிவுடைநம்பி சடலமாகக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையில் செம்பனார்கோவில் காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் அறிவுடைநம்பி கையில் பெட்ரோல் கேனுடன் செல்வது பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என இருவேறு கோணங்களில் குடும்பத்தினரிடமும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க அலுவலர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அறிவுடை நம்பியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:நோ ரேபிஸ் இறப்பு, கட்டுப்படுத்தப்படும் தெருநாய் பெருக்கம்...சீரிய முறையில் பணியாற்றும் சென்னை மாநகராட்சி!