நாகப்பட்டினம்: திருப்பூண்டி சிந்தாமணியைச் சேர்ந்தவர், சுப்பிரமணியன். இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ்ராம் என்பவர் உடன், திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 12 மணிக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் அரவிந்தன் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அதேநேரம், சுப்பிரமணியன் நெஞ்சு வலியால் துடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகி புவனேஷ்வராம், அங்கிருந்த செவிலியர்களிடம் ‘பணி நேரத்தில் மருத்துவர் யாரும் இல்லையா?’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சுப்பிரமணியை பரிசோதித்துள்ளனர். மேலும், சுப்பிரமணியனை நாகை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தி உள்ளனர். அப்போது பெண் மருத்துவரை, ”ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? உங்கள் யூனிபார்ம் எங்கே? நீங்கள் டாக்டர் என்பதற்கு என்ன அடையாளம்?” என்று கேட்டது மட்டுமல்லாமல், அந்த மருத்துவரை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
இவ்வாறு பாஜக நிர்வாகி இரவு நேரத்தில் பெண் அரசு மருத்துவரை யூனிபார்ம் அணியாமல் ஹிஜாப்பை ஏன் அணிந்துள்ளீர்கள் என வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சமூக, இஸ்லாமிய அமைப்புகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திருப்பூண்டி பகுதியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் கம்யூனிஸ்ட், விசிக, மமக மற்றும் மஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனிடையே, அரசு மருத்துவரை ஹிஜாப்பை கழற்றச் சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி புவனேஷ்வராம் மீது அரசு மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மத உணர்வைத் தூண்டுவது, பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.