மயிலாடுதுறை: சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது, “மயிலாடுதுறை தலைஞாயிறு கூட்டுறவு பசர்க்கரை ஆலையை புனரமைத்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீண்டும் உற்பத்தியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க பூம்புகார் சுற்றுலா தலத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், “தமிழ்நாட்டில் நடந்து வரும் ஆட்சி, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய ஆட்சியாக அமைந்துள்ளது.
அதனை நிரூபிக்கும் வகையில் முதல் சட்டப்பேரவை கூட்டத்திலேயே ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள பல நல்ல திட்டங்களை, தமிழ்நாடு அரசு, எதிர்ப்போம் எனக் கூறி வருகிறது.
விவசாய சட்டங்களால் நன்மை அல்லது தீமை உள்ளதா என ஆராய்ந்து பார்க்காமல், திமுகவினர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய செயல்களை திமுக அரசு கைவிட்டு, தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வரவேண்டும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தேர்தல் அறிக்கையில் கூறியதை போல் மாநில அரசு வரியை குறைத்து, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிட்டல் மயமாக்கப் பட்டதால் ஏற்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வீராணம் ஏரியிலிருந்து நீரேற்றம் செய்ய முடிவு