மயிலாடுதுறை: மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில், நேற்று(ஜூலை.26) பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் தங்க.வரதராஜன் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது, “ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்ஃபோன் ஒட்டு கேட்கப்படுவதாகவும், கூட்டுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியதை குறைகூறியும், பெட்ரோல், டீசல், விலை உயர்வை காரணம் காட்டியும் மக்களவை கூட்டத்தொடரை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்புகின்றனர்.
செல்போனை ஒட்டுகேட்பது எல்லாம் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம். ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது பிரணாப் முகர்ஜியின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது. பிரதமர் மோடி அமைச்சரவை விஸ்தரிப்பில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அமைச்சராக இருக்கின்றனர். தகுதியானவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.