மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்காக திறக்கப்பட்ட காவிரி நீர், கடந்த 23ஆம் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. இந்த நீர் பழங்காவிரி வழியாக சென்று 88 குளங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஆனால், பழங்காவிரியில் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாரப்படாத காரணத்தால் இந்த ஆண்டு குளங்களுக்கு நீர் செல்வது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில், குளங்களுக்கு நீராதாரமாக விளங்கும் பழங்காவிரியில் பல்வேறு இடங்களில் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததைக் கண்டித்தும், தூர்வாரி தண்ணீர் திறந்துவிடாததற்கு கண்டனம் தெரிவித்தும், மயிலாடுதுறை ரயிலடிப்பகுதியில் பழங்காவிரி மதகிற்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தூய்மை இந்தியா திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோடி.கண்ணன் தலைமையில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஏரி, குளங்களைத் தூர்வார அரியலூர் மக்கள் கோரிக்கை!