மயிலாடுதுறை:சமீபகாலமாக இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதில் ஒன்று தான் "அம்ரித் பாரத்" திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இந்த 508 ரயில் நிலையங்களும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற உள்ளன.
இதற்கான பணிகளை இன்று (ஆகஸ்ட் 6) பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். டெல்லியில் இருந்தப்படியே காணொளி மூலம் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 508 ரயில் நிலையங்களின் பணிகள் இன்று தொடங்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியின் போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.
இந்த 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் உத்தர பிரதேசத்தில் 55 ரயில் நிலையங்களும், பீகாரில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44 ரயில் நிலையங்களும், மேற்கு வங்கத்தில் 37 ரயில் நிலையங்களும், மத்திய பிரதேசத்தில் 34 ரயில் நிலையங்களும், அசாமில் 32 ரயில் நிலையங்களும், ஒடிசாவில் 25 ரயில் நிலையங்களும், பஞ்சாபில் 22 ரயில் நிலையங்களும், குஜராத், தெலங்கானாவில் தலா 21 ரயில் நிலையங்களும், ஜார்க்கண்டில் 20 ரயில் நிலையங்களும், ஆந்திராவில் 18 ரயில் நிலையங்களும், ஹரியானாவில் 15 ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் 13 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன.