மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்று(பிப்.15) நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து வாக்குச் சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "திமுகவின் 8 மாதகால ஆட்சிமீது மக்களுக்கு அதிக கோபம் இருக்கிறது. திமுக அரசு மக்கள் நலன் சாராத ஒரு அரசாக உள்ளது. 517 தேர்தல் வாக்குறுதிகளை அளித்த திமுக 7 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கை பார்க்கும்போது திமுக அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்களின் தலையிடு அதிகமாக உள்ளது. காவல்துறையினரை சரியாக செயல்படவிடவில்லை.
பெண்களுக்கு நகைகடன் தள்ளுபடி இல்லை
ரேஷன்கடைகளில் எந்த ஒரு பொருளும் தரமானதாக வழங்கப்படவில்லை. ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதைப்போல் மக்கள் நலனை சாராத அரசாக திமுக உள்ளதற்கு உதாரணம் பொங்கல் பரிசு தொகுப்பில் செய்த ஊழல். தரமற்ற பொருட்களை வழங்கி மக்கள் விரோதத்தைப் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மக்கள் தொகையில் 45 சதவிகிதம் பேர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப்போட உள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் மக்களைச் சந்தித்து ஓட்டுக்கேட்கவில்லை. வெளியே வந்து மக்களை சந்திக்க, சகோதர, சகோதரிகளை சந்திக்க பயம். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தருவதாக கூறியது எங்கே. நகைக் கடன் தள்ளுபடி எங்கே. 73 சதவிகித பெண்களுக்கு நகைகடன் தள்ளுபடி இல்லை என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த காரணங்களுக்காகத்தான் வெளியில் வந்து பிரச்சாரம் செய்யாமல் காணொலி மூலம் பிரச்சாரம் செய்துகொண்டுகிறார்.