கரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள குடிபெயர் தொழிலாளர்களைச் சிறப்பு ரயில், பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் பணியில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் தங்கியிருந்த 186 குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசா செல்ல விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசுப் பேருந்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அழைத்துவரப்பட்டு மருத்துவப் பரிசோதனை, ஆதார் அட்டை சரிபார்ப்பு செய்யப்பட்டு ரயிலுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இதைப்போல், திருச்சியிலிருந்த ஒடிசாவைச் சேர்ந்த 289 பேர் தமிழ்நாடு, புதுச்சேரி அரசின் ஒப்புதலின்படி பேருந்தில் காரைக்காலுக்கு அழைத்துவரப்பட்டு ஏற்கனவே அங்கிருந்த 186 பேருடன் சேர்த்து மொத்தம் 475 பேர் சிறப்பு ரயில்களில் ஏற்றப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா காரைக்கால் ரயில் நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் இருந்த சிறப்பு ரயிலைக் கொடியசைத்து அனுப்பிவைத்தார். இந்தச் சிறப்பு ரயில் 30ஆம் தேதி ஒடிசா சென்றடையும் என ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.