தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் இன்று(அக்.04) ஆயுதபூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பார்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதி உருவத்தை ஆவாகனம் செய்து சிறப்புப்பூஜை நடைபெற்றது.
இதில், தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று, இந்த ஆண்டு மே மாதம் உலகம் முழுவதும் பேசப்பட்ட தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசத்துக்கு பயன்படுத்திய சிவிகைப்பல்லக்கு, நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி, எடுபிடி உள்ளிட்ட ஆதீனத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தபட்டுவரும் தொன்மைவாய்ந்த பொருட்களுக்கும் பூஜை செய்தார்.