மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மங்கைநல்லூர் கடைத்தெருவில் கணேசன் என்பவர் நகை - அடகுக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்றிரவு (நவம்பர் 23) கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கண்ணாடி குத்தியதில் கொள்ளையடிக்க வந்த நபருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறவே கொள்ளை முயற்சியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து கொள்ளையரைக் கைது செய்ய காவல் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். சிகிச்சைக்காக அந்த நபர் மருத்துவமனைக்கு கண்டிப்பாக சென்றிருக்க வேண்டும் என எண்ணி காவல் துறையினர் அனைத்து மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட தீபக் ஜாங்லின்லின் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், சிறப்பு காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில், நரசிம்ம பாரதி, அசோக், செந்தில் ஆகிய காவலர்களை கொண்ட தனிப்படைக் குழுவினர் கொள்ளையரைத் தேடிவந்தனர். இந்நிலையில், கொள்ளையர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, மேலகாசாக்குடியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் தீபக் ஜாங்லின்லின் (26) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே காரைக்கால், விழுப்புரம், கேரள மாநிலத்தில் திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தீபக் ஜாங்லின்லினியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நகைக் கடையில் கொள்ளை முயற்சி: போலீசார் தீவிர விசாரணை