மயிலாடுதுறை மாவட்டம், செங்கமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன் (55). இவர் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயிலில் இரவு காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சாமிநாதன் கோயிலிலேயே தங்கியுள்ளதால், அவரது மகன்கள் அவருக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். நேற்று (மே. 9) காலை சாமிநாதனின் மகன்கள் செந்தில், மணிகண்டன் ஆகியோர் கோயிலுக்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது, சாமிநாதன் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மயங்கி கிடந்ததையும், சுவாமி சன்னதியின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சாமிநாதனின் அவரது மகன்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சாமிநாதன் திருவாரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையிலான காவலர்கள் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.